tamilnadu

img

இன்னும் என்னென்ன கோமாளித்தனங்களோ!

இருக்கும் சக்தியெல்லாம் திரட்டி தன் குடும்பத்தில் ஒரு முதல் தலைமுறைப் பட்டதாரியை உருவாக்க பல குடும்பங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. தினசரி வேலைக்குச் சென்றும் வருமானம் போதாமல் ஓவர் டைம் வேலை பார்த்து தன் உழைப்பின் பெரும்பகுதியை படிப்பிற்கு செலவழிக்கும் நிலையில் பெற்றோர்கள் உள்ளனர். இச்சூழலில் கொரோனா ஊரடங்கால் இருக்கின்ற வேலையும் போய் தற்போது வாரத்தில் ஒரிரு நாட்கள் மட்டுமே வேலை, அதைக்கொண்டு நாளிற்கு ஓரிரு வேளை மட்டுமே சாப்பாடு என பெற்றோர் தவித்து வருகின்றனர். இச்சூழலில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி 12 ஆம் வகுப்புப்பொதுத் தேர்வு முடிவுகளை வெளியிட்டு பேரிடர்காலத்திலும் தன் அறியாமையை வெளிப்படுத்தி யுள்ளது தமிழக அரசு.

மாணவர்களைப் பொறுத்தவரை தேர்ச்சி என்றாலே அடுத்தகட்ட நடவடிக்கையாக கல்லூரிச் சேர்க்கையை நோக்கித்தான் ஓடுவார்கள். இதற்கு கொரோனா காலமும் விதிவிலக்கல்ல. இதனை நன்கு அறிந்த அரசு தான், தற்போது தேர்வு முடிவுகளை எவ்வித முன்னறிவிப்புமின்றி திடீரென வியாழனன்று காலை வெளியிட்டுள்ளது. இதன் விளைவு, கொரோனாவைப் பற்றியோ உயிரைப் பற்றியோ கவலைப்படாமல் மாணவர்களும் பெற்றோர்களும் சாரை, சாரையாக கல்லூரி வளாகங்களை நோக்கி படையெடுத்துள்ளனர். இவ்வாறு கோவையில் சில கல்லூரிகள் முன் திரண்டிருந்த மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோரை சந்தித்தபோது..

வேறுவழியின்றி ஓடிக் கொண்டிருக்கிறோம்!
தனியார் கல்லூரி வாயிலில் சேர்க்கைக்காகக் காத்திருந்த மாணவி ஒருவர் கூறுகையில், இத்திடீர் அறிவிப்பு எங்களை எல்லையில்லா குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏனெனில் வியாழனன்று காலை செய்தியை பார்க்கும்போதுதான் தேர்வு முடிவு அறிவிக்கப்பட்டதை அறிந்தோம். இதனால் அவசரஅவசரமாக ஒவ்வொரு கல்லூரியாக சேர்க்கைக் காக ஏறி இறங்கி வருகிறோம். பல மணிநேரம் காத்திருந்து தற்போது தான் சேர்க்கை விண்ணப்பம் சமர்ப்பித்து விட்டு வெளியே வருகிறோம். கட்டணம் குறைவாக இருக்கும் அரசு உதவிபெறும் பாடப்பிரிவில் தான் சேர்க்கைக்காக விண்ணப்பித்திருக் கிறேன். இருப்பினும் சேர்க்கை நிச்சயம் கிடைக்குமா என்பது தெரியவில்லை. அடுத்தது என்ன செய்வதென்று எங்களுக்குக் கவலை, எவ்வாறு கல்விக் கட்டணம் கட்டுவது என்று எங்கள் பெற்றோருக்குக் கவலை. இருப்பினும் வேறுவழியின்றி ஓடிக் கொண்டிருக்கிறோம் என்றார்.

அரசின் அடாவடி…
கல்லூரியில் விண்ணப்பம் கொடுத்துவிட்டு வந்த தயாளன் என்பவர் கூறுகையில், இப்படி திடீரென முடிவுகள் அறிவிக்கப்பட்டதால் அவசர அவசரமாக சேர்க்கை நடவடிக்கையை நோக்கி காலையிலிருந்து ஓட ஆரம்பித்து விட்டோம். கடந்த மூன்று மணி நேரமாக வரிசையில் நின்று தற்போது தான்விண்ணப்பம் கொடுத்து விட்டு வெளியே வரு கிறோம். அப்படி சிரமப்பட்டு கொடுத்தும் கூட நாங்கள்அழைக்கும் போது வந்தால் போதும் என அனுப்பி விட்டனர். அதுவும் நிச்சயமற்ற சூழல் போல் தான் தெரிகிறது. திடீரென அறிவித்ததால் சான்றிதழ் நகல்கள் கூட எடுக்க இயலாமல் போனது போன்ற சிறு, சிறு பிரச்சனைகள் துவங்கி கல்லூரியில் இடம்கிடைக்குமா என்பது வரை தற்போது சிக்கல்கள் நீண்டு கொண்டிருக்கின்றன. தேர்வு முடிவுகள் அறிவிப்பு குறித்து அரசு முன்கூட்டியே அறிவிப்பு வெளியிட்டிருக்க வேண்டும். எவ்வித முன்னேற்பாடும் இல்லாத நிலையில் திடீரென தேர்வு முடிவுகளை வெளியிட்டிருக்கக் கூடாது என்று தன் ஆதங்கத்தை கொட்டினார்.

குழப்பத்தில் நாங்கள்..
தனியார் கல்லூரி ஒன்றில் சேர்க்கைக்காக வரிசையில் நின்று கொண்டிருந்த ஷெரின் என்னும் மாணவி கூறுகையில், திடீரென தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டதால் உண்மையில் குழம்பித்தான் போனோம். இங்கு வந்து பார்த்தால் சேர்க்கை வரிசை மிகவும் நீண்டு இருந்தது எங்களை மேலும்அச்சத்திற்குள்ளாகியுள்ளது. அதுவும் நான் வந்தமுதல் கல்லூரி இதுதான். நாங்கள் கூட பரவா யில்லை, கடைசி ஒரு தேர்வு மட்டும் எழுதாத 12 ஆம் வகுப்பு மாணவர்கள் நிலை இன்னும் கடின மாகதான் இருக்கும். ஏதோ குழப்பத்திலும், நம்பிக்கையிலும் நாங்கள் வரிசையில் நின்று கொண்டிருக்கிறோம். சுயநிதி இடமோ, அரசு உதவிபெறும் பாடப்பிரிவிற்கான சேர்க்கை இடமோ எது கிடைத்தாலும் சரி என காத்திருக்கிறோம். ஆனால் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் குறித்த முன்னறிவிப்பற்ற அறிவிப்பு குறித்து அரசு நிச்சய மாக பரிசீலித்திருக்க வேண்டும், என்று அவர் தெரி வித்தார்.

கொரோனாவை விடப்பெரிய அச்சம்
தனியார் கல்லூரியில் சேர்க்கைக்காக தனது மகளுடன் நின்றிருந்த பெயர் குறிப்பிட விரும்பாத பெண்மணி ஒருவர் கூறுகையில், நான் பூ வியாபாரம்பார்த்து வருகிறேன், என் கணவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். தற்போது திடீரென தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டதால் இருவரும் இதை நோக்கி ஓட ஆரம்பித்து விட்டோம். காலையிலிருந்து இக்கல்லூரியோடு சேர்த்து மூன்றாவது தனியார் கல்லூரியில் நிற்கிறோம். தற்போதைய சூழலில் சுயநிதியோ, அரசுஉதவி சேர்க்கை சீட்டோ எது கிடைத்தாலும் சரி என்னும் நிலையில் தான் உள்ளோம். வருமானம்இல்லாமல் இருவரும் கஷ்டப்பட்டுக் கொண்டி ருக்கும் வேளையில் இது எங்களைப் போன்றோரை அதிகம் பாதிக்கும் ஒன்றுதான். அரசு இதுகுறித்த முன்னறிவிப்பை நிச்சயமாக வெளியிட்டிருக்க வேண்டும். தேர்வு முடிவு என்றாலே நாம் சேர்க்கையை நோக்கி தான் ஓடுவோம். அதுவும் கொரோனா வேகமாகப் பரவிவரும் சூழலில் குழந்தைகளோடு இப்படி ஓடுவது கூடுதல் அச்சத்தை ஏற்படுத்துகிறது, என்று அப்பெண் கூறினார்.

தவிக்கவிடும் அரசு
கல்லூரி வாயிலில் விண்ணப்பத்திற்காக வரிசையில் காத்திருந்த அன்சானா என்ற மாணவி கூறுகையில், என் அப்பா தனியார் கம்பெனி ஒன்றில்கார் டிரைவர். காலையில் நேரத்திலேயே வேலை விஷயமா வெளியூருக்கு சென்றுவிட்டார். திடீரென ரிசல்ட் வெளியிட்டுட்டாங்க. நல்ல மார்க்குதான் எடுத்துருக்கிறேன். இருந்தாலும் திடீரென அறிவிச்சதால என்ன செய்யருதுனே எங்களுக்கு தெரியல. அம்மா என்னைய வரிசையிலே நிங்கவைச்சுட்டு, பீஸ் கட்ட நகைய அடமானம் வைக்க  போயிருக்குறாங்க என வேதனையோடு தெரிவிக்கிறார்.   

நடுத்தர மக்களுக்கே எதிலும் பாதிப்பு
மாணவியின் பெற்றோரான சந்தோஷ் என்பவர்கூறுகையில், பெற்றோராகிய நாங்கள் இருவருமே வேலைக்குச் செல்பவர்கள். வேலைக்குச் செல்லும் பாதி வழியில் என் மகள் அலைபேசியில் அழைத்துக் கூறியதால் அப்படியே அனைத்தையும் விட்டுவிட்டு இங்கு ஓடிவந்துவிட்டோம். நாங்கள் அரசு உதவிபெறும் பாடப்பிரிவிற்கு விண்ணப்பி த்துள்ளோம். எங்கள் விண்ணப்பங்களை மட்டும் வாங்கி வைத்துவிட்டு மீண்டும் அழைப்பதாக திருப்பி அனுப்பிவிட்டனர். எங்களுக்கு இப்போது என்ன செய்வதன்றே தெரியவில்லை. ஏற்கனவே கொரோனா ஊரடங்கு கால சிரமங்களைத் தாண்டி இப்போது தான் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தோம். இந்நிலையில், திடீரென பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிட்டது எங்களை மேலும் சிக்கலுக்கு உள்ளாக்கியுள்ளது. 

தற்போது காசு உள்ளவர்கள் எந்த நிலையிலும் தங்கள் பிள்ளைகளை கல்லூரியில் சேர்த்து விடுவார்கள். ஆனால், எங்களைப் போல் நடுத்தர வர்க்கம்தான் எல்லா நேரத்திலும் பதறுபவர்கள். நாங்கள் வேலை செய்யும் இடத்திலும் தற்போதைய பேரிடர் காலத்தை காரணம் காட்டி முன்பணமும் தர தயங்குகின்றனர். இந்த ஊரடங்கு காலத்திலேயே சேர்த்து வைத்த பணத்தையெல்லாம் செலவு செய்துவிட்டோம். பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பினை அரசு குறைந்தது ஒரு வாரத்திற்கு முன் சொன்னால் தான் நடுத்தர வர்க்க குடும்பங்கள் கல்விக்கட்டண செலவு குறித்து ஏதேனும் அவசர முடிவுகளையும், நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியும். ஆனால், இவ்வாறு திடீரென எவ்வித முன்னறிவிப்புமின்றி அரசு தேர்வு முடிவுகளை அறிவித்திருப்பது எங்களை அதிர்ச்சியிலும் குழப்பத்திலும் ஆழ்த்தியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கோமாளி அரசுகள்
இதேபோல், தனியார் கல்லூரி சேர்க்கைக்காக தனது மகளுடன் வந்திருந்த தகிரா பானு என்பவர் கூறுகையில், இங்க ஆட்சியில இருக்கிறவங்க திடீர், திடீர்-னு ஏதேதோ அறிவிக்கிறாங்க. ஏற்கனவே,500, 1000 ரூபாய் நோட்டு செல்லாதுனு அறிவிச்சாங்க. அப்புறம் திடீர்னு ஊரடங்குனு சொன்னாங்க. அப்புறம், பத்தாம் வகுப்பு தேர்வு  இருக்குனாங்க. அப்புறம் ரத்து-னு சொன்னாங்க. இப்ப,நேந்து வரைக்கும் பாதி பேருக்கு பரீட்சைவைக்கனும். அதனால பிளஸ் டூ தேர்வு ரிசல்ட் 
வெளிவர லேட்டாகும் என சொல்லிட்டு திடுதிப்புனுரிசல்ட்ட வெளியிட்டு எங்களை சிரமத்திற்குள்ளா க்குறாங்க. இந்த கோமாளிங்க ஆட்சியில இன்னும் என்னென்ன கோமாளித்தனங்கள் நடக்குமோனு தெரியில என ஆவேசமாக தெரிவித்தார்.

===ச.காவியா ===

;